நாமக்கல் அருகே  சத்தீஸ்கர் மாநில பெண் கொத்தடிமை தொழிலாளிகள் 59 பேர் மீட்பு

நாமக்கல் அருகே உணவுப்பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த
Updated on
1 min read

நாமக்கல் அருகே உணவுப்பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருந்த சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 59 பெண் தொழிலாளிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கையால் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர். உரிய சம்பளம் வழங்காமல் அதிகப்படியான நேரம் பணியில் ஈடுபடுத்தி வந்த அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மணிக்கட்டிபுதூரில் ஜெம்ஸ் அக்ரோ ஃபார்ம்ஸ் என்ற தொழிற்சாலை உள்ளது. உணவுப்பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த தொழிற்சாலையில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்கள் பெருமளவில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக அத்தொழிற்சாலையிலிருந்து தப்பிச்சென்ற ராஜேஸ்வரி என்ற பெண் அம்மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்ட ஆட்சியர் யஸ்வந்த்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அம்மாநில வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அக்குழு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தியை திங்கள்கிழமை சந்தித்து தெரிவித்த தகவலை அடுத்து நாமக்கல் சார் ஆட்சியர் அஜய்யாதவ் தலைமையில் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலைகள் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், காவல்துறை அடங்கிய குழு இணைந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 59 பெண்கள் கொத்தடிமைகளாக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்கள் 59 பேரும் மீட்கப்பட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் விடுவிப்புச் சான்றிதழுடன் முதற்கட்ட நிவாரணமாக தலா ரூ.1000மும் வழங்கப்பட்டது.

இதையடுத்து, 59 பெண்களும் தனி பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சத்தீஸ்கர் மாநிலம் நாராயணப்பூர் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டிருந்த 59 பெண்களும் மாதம் ரூ.3000 ஊதியம் வழங்குவதாகக் கூறி இடைத்தரகர்கள் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால் தெரிவித்தபடி ஊதியத்தை அப்பெண்களிடம் வழங்காமல் அவர்களை பணியில் சேர்த்துவிட்ட இரு இடைத்தரகர்களின் வங்கிக் கணக்கில் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்தப்பட்டு வந்துள்ளது. அவர்களும் இத்தொகையை பணிபுரியும் பெண்களிடம் அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். தவிர, தரம் குறைவான உணவுகள் மட்டுமே அப்பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 59 பெண்களும் மீட்கப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலையின் உரிமையாளரான சென்னையைச் சேர்ந்த ஜூனிóத்அகமத் மற்றும் இரு இடைத்தரகர்கள் மீதும் கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மேலும் அரசு நிவாரணம் தலா ரூ.19 ஆயிரம் பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com